Monday, 24 November 2014

Lord Swraj Paul attacks for not installing Gandhi statue at British Parliament Square

காந்திக்கு சிலை வைக்க இங்கிலாந்து அரசிடம் பணம் இல்லையா? இந்திய வம்சாவளி தொழிலதிபர் வேதனை


லண்டன், நவ.23-

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த அந்நாட்டின் அரசு அதற்கான நிதியை ஒதுக்காதது குறித்து லண்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியராக பிறந்து தற்போது இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்று லண்டனில் வாழந்து வருபவர், லார்ட் சுவராஜ் பால்(83). அந்த நாட்டின் பெரும் தொழிலதிபராகவும், கொடையாளராகவும் இருக்கும் இவர், இங்குள்ள இரண்டு பிரபல பல்கலைக்கழக்ங்களின் வேந்தராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்திய வெளியுறவு துறை மந்திரி அடங்கிய குழுவினர் முன்னர் இந்தியாவுக்கு வந்தபோது, அந்நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உலகின் பெருந்தலைவர்களின் சிலைக்கு நடுவே மகாத்மா காந்தியின் சிலையும் வைக்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்த சிலையை அமைக்க அங்கிருக்கும் இந்தியர்கள் ஒன்று திரண்டு சுமார் 10 லட்சம் பவுண்டுகள் வரை நிதி திரட்டியுள்ளனர். இதற்கு சமமான ஒரு தொகையை செலவிட்டு
பாராளுமன்ற வளாகத்தில் காந்தியின் சிலையை நிர்மானிக்க முன்வராத இங்கிலாந்து அரசுக்கு லார்ட் சுவராஜ் பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இது தொடர்பாக தனது வேதனையை வெளிப்படுத்திய லார்ட் சுவராஜ் பால் கூறிய கருத்தின் சிறு பகுதி:-

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தபோது அந்த செய்தி பெரிய அளவில் வெளியானது.
இதை அறிந்த நான் மிகவும் பூரிப்படைந்தேன்.

இந்த சிலையை நிறுவுவதற்கு இங்குள்ள இந்தியர்கள் 10 லட்சம் பவுண்டுகளை திரட்டி தந்துள்ள நிலையில், அதற்கு இணையான ஒரு தொகையை இங்கிலாந்து அரசால் ஒதுக்க முடியாதா?

இந்த அரசாங்கம் மற்ற எவ்வளவோ விவகாரங்களுக்கு ஏராளமான தொகையை வீணாக செலவிடுகின்றது. ஆனால், ரத்தம் சிந்தாமல் ஒரு நாட்டின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற உண்மையை உலக வரலாற்றுக்கு முதன்முதலில் உணர்த்திய ஒரு மனிதரின் (காந்தி) சிலைக்கு 10 லட்சம் பவுண்டுகளை செலவழிக்க தயக்கம் காட்டுகிறது.

எனக்கிருக்கும் வருத்தம் எல்லாம் என்னவென்றால்.., ஒருவருக்கு எதையுமே அன்பளிப்பாக கொடுக்காமல் அதற்கு நீங்கள் ஏதாவது தர முடியுமா? என்று கேட்பது போல் இங்கிலாந்து அரசு நடந்துக் கொள்கிறதே என்பதுதான்.

இந்த நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்படும் என்ற அறிவிப்பை இந்தியாவுக்கு சென்றபோது வெளியிட்டது ஏன்? அந்த அறிவிப்புக்கு பின்னணியில் இருந்தது என்ன? என்னும் எனது கேள்விக்கு யாராவது (இங்கிலாந்து அரசு தரப்பில் இருந்து) பதில் சொல்ல வேண்டும்.

அந்த அறிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். ஆனால், இதற்கான மிகவும் எளிமையான பதில் எனக்கு தெரியும். இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காகவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர்களுக்கு இருந்த மகிழ்ச்சி, இந்த சிலையை அமைக்க நாம்தான் செலவு செய்தாக வேண்டும் என்று அறிந்த வேளையில் காணாமல் போய்விட்டது.

இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அரசின் சிக்கன நடவடிக்கையாக லண்டன் நகரில் உள்ள லண்டன் மிருகக்காட்சி சாலையை மூடிவிட 1992-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டபோது, அந்த முடிவை தடுத்து, அந்த மிருகக்காட்சி சாலை தொடர்ந்து செயல்பட 10 லட்சம் பவுண்டுகளை கொடையாக அளித்தவர், லார்ட் சுவராஜ் பால் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment